அமெரிக்க தூதரகத்திற்கு அருகே பயங்கர வெடிகுண்டு தாக்குதல்….

தெற்காசியா நாடானஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

காபூலில் உள்ள புல்-இ-மஹ்மூத் கான் பகுதிக்கு அருகே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்கப்படுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிய இராணுவ தளத்தை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், கால்பந்து வீரர்கள், கூட்டமைப்பின் ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட 68-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் உள்ளுர் தொலைக்காட்சி சேனல் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டதை காபூல் தலைமை பொலிஸ் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஆப்கானில், தலிபான் மற்றும் ஐஎஸ் அமைப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கத்தார் நாட்டில் அமெரிக்கா-தலிபான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் காபூலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.