இந்திய அணியின் முக்கிய வீரர் அடுத்த போட்டிகளில் விளையாட மாட்டார்! கேப்டன் கோஹ்லி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த 2 போட்டிகளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விளையாட மாட்டார் என கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் நகரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக் வொர்த் லீவிஸ் முறையில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயமடைந்தார்.

அவர் 5வது ஓவரை வீசும்போது வழுக்கி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து மைதானத்தை விட்டு வெளியேறிய புவனேஷ்வர் குமார், அதன் பின்னர் திரும்பி வரவில்லை.

இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கோஹ்லி, புவனேஷ்வர் குமாரின் காயம் குணமடைவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும்,

அவர் 2 அல்லது 3 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவித்தார். அத்துடன் முகமது ஷமி அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக தொடக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்த நிலையில், தற்போது புவனேஷ்வர் குமாரும் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.