தமிழர்களும், சிங்களவர்களும் கதிர்காம கந்தனை நாடிச் செல்லும் போது 30 வருடகால யுத்தம் ஏன் செய்யப்படது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்து பௌத்த கலாச்சார பேரவையில் இரண்டாம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
கதிர்காமத்திலுள்ள முருகனை வழிபட தமிழர்களும் போகிறார்கள், சிங்களவர்களும் போகிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் சென்று ஒரே தெய்வத்திடம் முறையிடுகிறார்கள்.
அப்படியிருக்கையில் ஏன் நாம் 30 வருடங்கள் யுத்தம் செய்தோம். இலங்கையிலுள்ள அனைத்து பேருந்துகளிலும் லக்ஷ்மியும் இருக்கிறார், சரஸ்வதியும் இருக்கிறார், முருகனும் இருக்கிறார், பிள்ளையாரும் இருக்கிறார், புத்தரும் இருக்கிறார்.
முழு பௌத்தர்களினதும் இதயம் தான் கண்டியிலுள்ள தளதா மாளிகை. தளதா மாளிகை மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்காக தென்பகுதியிலுள்ள எந்த இந்து கோயில் மீதும் தாக்குதல் நடத்த முற்படவில்லை.
அதேபோன்று ஸ்ரீமகாபோதியிலும் அதிகாலையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். அதற்காக இந்து நபரொருவர் மீது தாக்குதல் நடத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.






