தோல்வியடைந்த தந்தை: மகனின் செயலை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்

டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்த தந்தையை மகன் ஓடிச்சென்று தேற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், 35 வயதான நிக்கோலாஸ் மஹட் அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனார்டோ மேயரிடம் தோல்வியடைந்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

போட்டியில் தோல்வியடைந்ததும், சோகமாக இருந்த நிக்கோலாஸ் மஹட் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார். மைதானத்தில் அமர்ந்திருந்த அவருடைய 7 வயதான மகன் தந்தை கண்கலங்குவதை பார்த்து வேகமாக ஓடிவந்து கட்டியணைத்துள்ளான்.

இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த இடத்திலே கண்கலங்க ஆரம்பித்துவிட்டனர். பின்னர் ரசிகர்களுக்கு கைகாட்டியபடியே, நிக்கோலா மஹட் தன்னுடைய மகனுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிக்கோலா மஹட், என்னுடைய மகனை மைதானத்தில் பார்த்ததும் எனக்கு உணர்ச்சி மிகுதியாகிவிட்டது.

நான் வெற்றி பெறுவேன் என நினைத்து தான் அவன் வந்திருந்தான். ஆனால் நான் தோற்றுவிட்டேன். எப்பொழுதுமே என்னுடைய மகன் அழுவான். நான்தான் அவனை தேற்றுவேன். ஆனால் இந்த முறை அப்படியே மாறுதலாக அமைந்துவிட்டது என தெரிவித்தார்.