ஆசை மகளுடன் சேர்ந்து உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர்.. மனைவியின் நிலை என்ன?

பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலபாஸ்கர் சாலை விபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் இறந்த நிலையில் அவரின் மனைவி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி வருகின்றனர்.

பாலபாஸ்கர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25-ம் திகதி கோயிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுத்திரும்பும் போது அவரின் கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாலபாஸ்கரும், அவர் மகளும் உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த அவர் மனைவி லஷ்மி மற்றும் கார் ஓட்டுனர் அர்ஜுன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் நலம் தேறி வருகின்றனர்.

பாலபாஸ்கர் இறந்து ஏழு மாதங்கள் ஆன நிலையில், அவர் இறப்பு விபத்தல்ல கொலை என பாஸ்கரின் தந்தை உண்ணி புகார் தெரிவித்துள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய பிரகாஷ் தம்பி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தங்களுக்கு பாலபாஸ்கரை தெரியும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் பிரகாஷ் தம்பி பாலபாஸ்கரிடம் மேனேஜராகப் பணியாற்றினேன் எனவும் கூறியதால் இந்த சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பாலபாஸ்கரின் மனைவி லக்ஷ்மி இந்த விபத்து குறித்துப் பேசியுள்ளார்

அவர் கூறுகையில், விபத்துக்கு பின்னர் என்னால் பிறர் உதவி இல்லாமல் நடக்க முடியவில்லை.

தற்போது எனக்கு இருக்கும் ஒரே ஆசை நான் சுயமாக நடந்தால் போதும் என்பது தான்

விபத்தின் போது காரின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த என் கணவர் சீட் பெல்ட் அணியவில்லை.

ஆனால், அர்ஜுனும் நானும் அணிந்திருந்தோம். கணநேரத்தில் நடந்த விபத்தில் சீட் பெல்ட்டும், ஏர் பலூனும் அர்ஜுனைக் காப்பாற்றிவிட்டது.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த பாலாவுக்கு பலத்த அடிபட்டதோடு, அவரது உடல் முழுவதும் முன்னால் இருந்த சீட்டில் மோதியதால் அதிகமாகப் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் நான் மயங்கிவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளேன். நானும் இறந்துவிடுவேன் என்றுதான் மருத்துவர்கள் கருதியுள்ள நிலையில் பிழைத்துவிட்டேன்.

தன் வாழ்நாளில் பாலபாஸ்கர் எப்போதுமே சுயநலமாக இருந்ததில்லை. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். அவரிடம் உள்ள தீய பழக்கமாக நான் கருதுவது, யாரையும் எளிதில் நம்பிவிடுவார்.

யாராவது தவறு செய்தால் அவர்களை எப்போதுமே தள்ளித் தான் வைத்திருப்பார். இப்படிப்பட்ட ஒருவர் எப்படி குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்க முடியும்.

பாலபாஸ்கருக்கு மேனேஜர்கள் என்று யாரும் கிடையாது. அவருக்கு நிறைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தெரியும் அவர்களில் பிரசாத் தம்பியும் ஒருவர் அவ்வளவுதான்.

மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

விபத்து நடந்த நாளில் என் கணவர் மட்டும் முன் இருக்கையில் இருந்திருந்தால் இன்று என் அருகில் அமர்ந்து என்னுடன் பேசிக் கொண்டிருப்பார், தொடர்ந்து வயலின் வாசித்துக்கொண்டிருப்பார் என உருக்கமாக கூறியுள்ளார்.