இந்தியாவின் கேரள மாநிலத்தில் மார்பக புற்றுநோய் இருப்பதை உறுதி செய்யாமல் பெண் ஒருவருக்கு கீமோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் எடுத்துக் கொண்ட சிகிச்சையின் பக்க விளைவுகளை தற்போது அந்த பெண்மணி எதிர்கொண்டு வருகிறார்.
கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ரஜனி. இவருக்கு மார்பகத்தில் கட்டி இருப்பதாக தெரியவந்த நிலையில், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அவர்கள் மாதிரிகளை சேகரித்து, ஒன்றை தனியார் மருத்துவ ஆய்வகத்திலும், எஞ்சிய ஒன்றை அதே மருத்துவமனையில் உள்ள புற்றுநோய்க்கான ஆய்வகத்திலும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தனியார் ஆய்வகத்தில் இருந்து கிடைத்த ஆய்வு முடிவில், ரஜனி என்பவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கோட்டயம் மருத்துவக் கல்லூரி புற்றுநோய் பிரிவில் இவருக்கு கீமோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மார்பக புற்றுநோய்க்கான மருந்து மாத்திரைகளும் எடுக்கொண்டு வந்துள்ளார் ரஜனி.
இந்த நிலையில், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில், ரஜனியின் மார்பில் புற்றுநோய் அல்ல வெறும் கட்டி தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
தவறு நடந்திருப்பது உறுதி செய்த மருத்துவர்கள், தனியார் ஆய்வகத்தில் அளிக்கப்பட்ட மாதிரியை திரும்பப்பெற்று, மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதிலும், அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது ரஜனி, கீமோ சிகிச்சை மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட பக்க விளைவுகளை எதிர்கொண்டு வருகிறார்.
இதனிடையே, மார்பகத்தில் உருவான கட்டியை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர். இருப்பினும் கீமோ சிகிச்சையால் தலை முடி மொத்தமும் உதிர்ந்து, உடல் முழுவதும் கடும்வலியுடன் போராடி வருகிறார் ரஜனி.
தற்போது தனியார் மருத்துவ ஆய்வகத்தால் தமக்கு ஏற்பட்ட நிலைக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி,
கேரள சுகாதார அமைச்சருக்கு மனு அளித்து காத்திருப்பதாக ரஜனி தெரிவித்துள்ளார்.