வைகோவின் திடீர் அறிவிப்பு!!

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது காலை முதல் துவங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியானது பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில்., தற்போது பாரதிய ஜனதா கட்சி 346 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தை பொறுத்த வரையில் காலையில் இருந்தே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உள்ள கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில்., சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னணி வகித்து வந்துள்ளது.

இந்நிலையில்., தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி., தனது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் வைகோ கூறியிருப்பதாவது.,

“மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகால பாஜக அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சினை முதல் அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்ததையும், அதிமுக அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக்கொள்ள முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அதிமுக அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைகொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அதிமுக அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்.

வடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள். தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தந்து இருக்கின்றார்கள்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு அளித்து, மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு, நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என சந்தேகித்திருந்த நிலையில் வைகோவின் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.