தங்களை யாரேனும் தத்தெடுக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் தாய் தந்தையற்ற குழந்தைகள் நடைபயின்ற கேட் வாக் ஒன்று கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது.
பிரேசிலில் Cuiaba நகரில் 18 சிறுவர் சிறுமியர் தங்களை தத்தெடுப்பதற்காக கூடியிருந்த மக்கள் முன் கேட் வாக் செய்தனர்.
இந்த சம்பவம் மனித உரிமைகள் அமைப்புகளை கடும் கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
Eduardo Mahon என்னும் வழக்கறிஞர், ஆப்பிரிக்காவில் அடிமைகளை விலைக்கு வாங்கும் முன் அவர்கள் பல்லைப் பிடித்து பார்க்கும் நிகழ்வுகளை நினைப்பூட்டும் இந்த நிகழ்வு, பழைய அடிமைச் சந்தையை நினைப்பூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தேர்தலில் பிரேசில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட Guilherme Boulos, நான்கு முதல் 17 வயது வரையுள்ள பிள்ளைகளை கேட் வாக் செய்ய வைத்துள்ள இந்த ஆபாசமான நிகழ்வு, குழந்தைகளின் மனதில் ஆறாத காயங்களை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் அரசியல்வாதியான Manuela D’Avila, நான் படித்ததிலேயே இதுதான் மிகவும் சோகமான ஒரு செய்தி, தத்தெடுக்கப்படுவோம் என்ற கனவுகள், கற்பனைகளுடன் கேட் வாக் செய்யும் குழந்தைகளைப் பற்றி படிக்கும்போது, ஒரு குழந்தையை நேசிப்பதற்கு அவர்கள் அழகாக இருக்கிறார்களா என சோதித்தறிவது அவசியமா என்று தோன்றுகிறது என்கிறார்.
சுமார் 200 பேர் கூடியிருந்த அந்த கேட் வாக் நிகழ்ச்சியில், குழந்தைகள் தங்கள் தலைமுடி, உடை மேக் அப் என பல விதத்திலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு நடை பயின்றார்கள்.
அரசின் பொது மக்கள் சேவை அலுவலகம் ஒன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், இந்த சிறார்களில் பலர் தத்தெடுக்கப்படாமல் போகலாம், அப்படி நடக்கும் பட்சத்தில், அது அந்த பிள்ளைகளின் மனதில் மிக தீவிரமான ஏமாற்றத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களது தன்னம்பிக்கையையும் பாதித்து நீண்டகால மனோவியல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளது.






