ஆடு திருடியவன் யார் என பெண் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் அந்த ஆடே சரியான தீர்ப்பளித்த ருசிகர சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகன் அருணாச்சலம்(45). இவர் பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டில் ஆடு, கோழிகள் வளர்த்து வருகிறார். ஆடுகள் தினமும் காலையில் அங்குள்ள மந்தைவெளிக்கு மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி விடும். நேற்று முன்தினம் மாலையில் திரும்பவேண்டிய ஆடுகளில் ஒரு ஆடு தனது 2 குட்டிகளுடன் திரும்பி வரவில்லை.
உடனே அருணாச்சலம் மற்றும் குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் நேற்று மாலை மீண்டும் தேடும் பணி தொடர்ந்தது. அருணாச்சலத்தின் தாய் மலையாச்சியம்மாள் ஒவ்வொரு தெருவாக குரல் கொடுத்து சென்றார். அப்போது பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் இருந்து இவரது குரல் கேட்டு ஒரு ஆட்டின் சத்தம் வந்துள்ளது. அவர் போய் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்து விட்டனர்.
பின்பு மலையாச்சியம்மாள் தனது மருமகள், பேரப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஆடு இருந்த வீட்டிற்கு சென்ற போது ஆடு தனது இரண்டு குட்டிகளுடன் கட்டிப் போடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டாரிடம் கேட்டதற்கு ஆடு என்னுடையது சந்தையில் இருந்து ரூபாய் 11 ஆயிரத்திற்கு வாங்கி வந்ததாக வாக்குவாதம் செய்துள்ளார்.
உடனே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் பொலிசார் வந்து ஆட்டை அவிழ்த்து விடக் கூறியுள்ளனர். அவிழ்த்து விட்டதும் ஆடு மலையாச்சம்மாளை உரசி முகர்ந்து பார்த்தது மட்டுமின்றி ஆடு துள்ளிக்குதித்து நடக்க ஆரம்பித்துள்ளது.
ஆட்டினை பின்தொடர்ந்து வந்த பொலிசாரும் வந்துள்ளனர். பின்பு தனது உரிமையாளர் வீட்டிற்கு சென்ற ஆடு அங்கு வழக்கமாக தண்ணீர் குடிக்கும் தொட்டிக்குள் தலையை நுழைத்து தண்ணீர் பருகத் தொடங்கியது.
பொலிசாரிடம் ஆட்டின் உரிமையாளர் இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இது எங்க ஆடுதான் என்று அதுவே தீர்ப்பளித்து விட்டது என அருணாச்சலம் ஆட்டை பரிவுடன் தடவிவிட்டவாறு தெரிவித்தார்.
இதையடுத்து ஆட்டை திருடியவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், அவர் கறிக்கடை நடத்தி வருபவர் என தெரியவந்தது மட்டுமின்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.