இந்தியாவின் அடுத்த அரசை தேர்வு செய்யும் மக்களவை பொதுத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் நேற்று மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக, இந்தியாவில் உள்ள மொத்தம் 543 தொகுதிகளில் தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி மட்டும் இல்லாமல் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆனது வருகின்ற மே 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 22 சட்டமன்றத் தொகுதிகளில் இடை தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலுக்கான தேர்தல் முடிந்த பிறகு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியானது.
இதில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பெருபாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அந்த வகையில் பிரபல ஊடகமான ஸ்வர்னா செய்தி நிறுவனமும் தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் அரியணை ஏறும் என ஸ்வர்னா நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகளும் கூறியுள்ளன.
ஸ்வர்னா நியூஸ் சேனல் நடத்திய தேர்தலுக்கு பிந்தயை கருத்து கணிப்பின்படி, தேசியளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தபட்சம் 295 இடங்கள் முதல் அதிகபட்சமாக 315 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, தேசிய அளவில் குறைந்தபட்சம் 122 தொகுதிகளையும், அதிகபட்சமாக 125 தொகுதிகள் வரையும் கைப்பற்றும் என ஸ்வர்னா நியூஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியில் அல்லாத இதர கட்சிகள், சுமார் 102 தொகுதிகளை கைப்பற்றும் என முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதாவே ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






