நடிகர் ரஜினிகாந்தின் மனைவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

கோச்சடையான் படம் நஷ்டமடைந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் போலி கடிதம் அனுப்பியதாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி லதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2014ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் வெளியானது. கர்நாடகத்தில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று இதை வாங்கி விளம்பரம் செய்தது.

ஆனால், படம் எதிர்பார்த்தபடி ஓடாத காரணத்தால் பண நஷ்டம் ஏற்பட்டது. வினியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம், நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது.

ரஜினிகாந்த் குடும்பம் தரப்பில் அவரது மனைவி, நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அதில் தங்களுக்கும் இந்த படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கடிதம் போலியானது என தெரியவந்துள்ளது. இதை விளம்பர நிறுவனம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது.

இதனால், போலி கடிதம் தொடர்பாக விளக்கம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஏற்கனவே லதா ரஜினிகாந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், 2வது முறையாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட லதா தரப்பு மே 20ல் ஆஜராவதாக கூறியுள்ளது.