வறுமையால் சிக்கிய குடும்பத்தை காப்பாற்றிய கோடீஸ்வரர்…

கணவன் இறந்ததால், கடனில் தத்தளித்த குடும்பத்தினருக்கு கோடீஸ்வரர் ஒருவர் தானாக முன் வந்து உதவி செய்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே இருக்கும் காக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆஷிக். இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவரின் தந்தை புற்றுநோய் பாதிப்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதே போன்று ஆஷிக்கின் சகோதரியும் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் படுக்கை படுக்கையாக இருந்துள்ளார்.

தந்தையின் புற்றுநோயை குணப்படுத்துவதற்காக வீடு மற்றும் நிலத்தை வங்கியில் பிணையாக வைத்து சில லட்சங்கள் கடனாக பெற்றிருந்ததால், அதை அடைப்பதற்காக அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அதன் பின் அங்கு கிடைத்த சம்பளத்தை வைத்து கடன்களை சிறுக சிறுக அடைத்து வர, கடந்த செப்டம்பர் மாதம் பணிக்குச் சென்ற இடத்தில் ஆஷிக் மர்மான முறையில் இறந்துகிடந்தார்.

ஏற்கனவே வறுமையில் இருந்த குடும்பம், தற்போது ஆசிக் அரபு நாட்டிற்கு சென்றதன் மூலமாகவே கொஞ்சம், கொஞ்சமாக வறுமையிலிருந்து மீண்டு வந்த நிலையில், அவர் இறந்த பின் மீண்டும் அவர்களின் குடும்பத்தினை வறுமை வாட்டியது.

அதுமட்டுமின்றி அப்பாவின் நோயை குணப்படுவத்துவதற்காக வாங்கியில் வாங்கியிருந்த கடன் மற்றும் வட்டி அதிகரித்து கொண்டே சென்றது.

2009-ல் அவர் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 17 லட்சம் ரூபாயை தொட்டதால், வங்கி நிர்வாகம் அவரது வீட்டை ஜப்தி செய்வதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் மிகுந்த வேதனையடைந்த ஆஷிக்கின் மனைவி வீட்டை காப்பாற்றுவதற்காக பல இடங்களில் முயற்சி செய்து வந்தார்.

ஆனால் யாரும் பணம் கொடுக்க முன்வராததால், வீட்டை காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். வீட்டை காலி செய்ய வங்கி நிர்வாகம் இரண்டு நாட்கள் கெடு கொடுத்திருந்தது.

ஆனால் மறுநாளே ஆஷிக்கின் வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் வந்ததால், குடும்பத்தினர் வீட்டை காலி செய்யதான் கூற வந்துள்ளனர் என்று நினைத்து கொண்டிருக்க, அப்போது வங்கி அதிகாரிகள் திடீரென்று வீடு மற்றும் நிலத்துக்கான ஆவணங்களை ஒப்படைத்து, உங்கள் கடன் திரும்பி செலுத்தப்பட்டு விட்டது, வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூற அவர்கள் திகைத்து போய் நின்றுள்ளனர்.

அதன் பின் யார் இப்படி பணத்தை திருப்பி செலுத்தியது என்று ஆஷிக்கின் மனைவி விசாரித்த போது, அவரது குடும்பம் வறுமையில் வாடிய தகவல் அனைத்தும் உள்ளூர் அமைப்பு ஒன்றின் மூலம் கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்வரர், எம்ஏ யூசுப் அலிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தெரிந்துள்ளது.

இதனால் இது குறித்து உடனடியாக விசாரித்த அவர், அதன் பின் தனது நிறுவனத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் மூலமாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டு ஆஷிக் குடும்பத்தின் மொத்த கடனையும் 24 மணி நேரத்தில் திருப்பிச் செலுத்தியுள்ளார்.

இதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆஷிக் குடும்பத்தினர், ரமலான் மாதத்தில் தெய்வம் போல் எங்களைக் காப்பாற்றினார். அவருக்கு எப்படி நன்றிகள் சொல்வது என்றே தெரியவில்லை. அவருக்காக எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

எம்ஏ யூசுப் அலி துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லூலூ குரூப்பின் சேர்மன் ஆவார்.

இவர் இதற்கு முன்பு கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் தன்னுடைய ஹெலிகாப்டரில் சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிட்டதுடன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 18 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உதவியவர். அதுமட்டுமின்றி தன்னுடைய சொந்த ஊரான திருச்சூர் அருகே நாட்டிகாவுக்கு 10 கோடிக்கும்அதிகமான நலத்திட்டங்களைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.