இலங்கையை உலுங்கிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும், கவனம் செலுத்தப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய மோசமான தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெறும் என ஏற்கனவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்தாததும் பாரதூரமான பிரச்சினையாகும்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றன என பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.
தொடர் குண்டு வெடிப்பு சம்பவமானது மிகவும் வேதனைக்குரியதும் துரதிஷ்டவசமான சம்பவமாகும். இந்த மோசமான சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அதற்கமைய அவசர பாதுகாப்பு சபையை கூட்டி அடுத்தகட்டமாக துரிதமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நாம் ஆராய்ந்தோம்.
இந்த சம்பவத்துடன் சர்வதேச சதித்திட்டம் உள்ளனவா என்பது குறித்து ஆராய சர்வதேச பொலிஸ் உதவி எமக்கு அவசியம். இது குறித்தும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது புலனாய்வு பிரிவும் இதுகுறித்து ஆராய்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர்களுடன் இது குறித்தும் பேசினேன். இந்த தாக்குதலில் 200 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேபோல் இதில் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த தாக்குதல் குறித்து தகவல் முதலில் தெரிவிக்கப்பட்டும் அது குறித்து கவனம் செலுத்தாமையேயாகும். இதுகுறித்து உரிய காரணிகளை ஆராயவேண்டியுள்ளது.
எனக்கும் அமைச்சரவைக்கும் இந்த காரணிகளை தெரியப்படுத்தாதது ஒரு காரணியாக அமைந்துள்ளது. ஆனால் இவற்றை தாண்டி முதலில் நாட்டினை பலவீனப்படுத்தாது உறுதியான நாட்டினை கொண்டுசெல்ல வேண்டும். பாதுகாப்பு தரப்புக்கு தகவல் கிடைத்தும் அதனை சரியாக கையாளாதது பாரிய பிரச்சினையாகும்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது. இதனுடன் தொடர்புபட்ட பயங்கரவாத சட்டத்தின் கீழ் இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.
இந்த சம்பவங்களை அடுத்து இனவாதம், மதவாதம் காக்கப்படுமாயின் அது மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளிலேயே வந்து முடிவடையும். ஆகவே இலங்கை மக்கள் அனைவரும் அமைதியாக செயற்பட வேண்டும்.
இந்த நாட்டினை பலவீனப்படுத்தும் ரீதியில் பயங்கரவாதத்தை பரப்ப எவரேனும் குழுக்கள் முயற்சி செய்தால் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் அவர்களை அழிப்போம், அதேபோல் இந்த சவாலை வெற்றிகொள்ள சகல மக்களையும் ஒன்றிணைய வேண்டிக்கொன்கிறேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலை நடத்தப் போவதாக அடிப்படைவாத அமைப்பு ஒன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிக்கை புலனாய்வு பிரிவினரினால் பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.