நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 17 வது மக்களவை தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்து கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடுமுழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதில், தமிழகம், புதுச்சேரி மக்களவை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. இந்த இரண்டு கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இதில், தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிக்கும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், காலியாக உள்ள 1 சட்டமன்ற தொகுதிக்கும் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் பெற்று கொண்டுள்ளது.
தமிழகத்தை பொருத்த வரை 39 மக்களவை தொகுதியில் 1,236 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 488 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று காலை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று முடிந்தது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை ரூ.46.29 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், ரூ.69.03 கோடி மதிப்புள்ள 212.5 கிலோ தங்கம், 327.5 கிலோ வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.21.23 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுக்காக பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். எனவே இரண்டு குற்றமும் வழக்காக பதிவு செய்யப்படும்.






