முழுநேர அரசியலுக்கு வந்துவிட்டீர்களா என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கேட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது 70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரின் பிறந்த நாளுக்கு பல்வேறு முக்கியஸ்தர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பிறந்த நாள் அன்று ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு எடுத்த கோத்தபாய ராஜபக்ச தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவ்வாழ்த்தினை ஏற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க, பதிலுக்கு சில விடயங்கள் குறித்து பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, கோத்தபாயவிடம் முழுநேர அரசியலுக்கு வந்துவிட்டீர்களா? அரசியல் வேலைகளில் நீங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை பார்க்கிறேன் என்று பிரதமர் ரணில் கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள கோத்தபாய, ஆம்.. செய்யத்தானே வேண்டும் என்று சிரித்தபடி கூறியதாக தெரிகின்றது.
அடுத்துவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்றன.
அமெரிக்க குடியுரிமை கொண்டிருக்கும் கோத்தபாய, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை துறக்கும் முடிவில் இருக்கின்றார் என்கின்றன அக்கட்சித் தகவல்கள்.
இந்நிலையில் கோத்தபாயவிடம் ரணில் இக்கேள்வி கேட்டதன் மூலமாக மகிந்த தரப்பில் கோத்தபாய களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.






