இந்திரா காந்தியின் குழந்தையை மீட்க சர்வதேச பொலிசாரிடம் புகார்!

மலேசியாவில் முன்னாள் கணவரிடம் இருந்து தமது மகளை மீட்டுத் தர வலியுறுத்தி சர்வதேச பொலிசாரை அணுக உள்ளதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய சிறுமியின் தாயார் இந்திரா காந்தி, தனது மகள் பிரசன்னா டீக்‌ஷாவை மீட்பது குறித்து வரும் ஏப்ரல் முதல் திகதியன்று மலேசிய சட்ட அமைச்சர் டத்தோ லியு வுய் கியோங்கை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா டீக்‌ஷாவை அவரின் பரமரிப்பில் வளர்க்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் முன்னாள் கணவர் பத்மநாபன் என்கிற முகமட் ரிடுவான் குழந்தையை வழங்க இதுநாள் வரை முன்வரவில்லை.

மேலும் பிரசன்னா டிக்‌ஷா “மைகிட்” அடையாள ஆவணம் விவகாரத்தில் தேசிய பதிவிலாகாவில் குளறுபடிகள் நடந்துள்ளது என நாங்கள் கூறியதை அவ்விலாகா மறுத்து நாங்கள் மன்னிப்பு கோரவேண்டும் என கோரியுள்ளது.

மட்டுமின்றி கால அவகாசமும் முன் வைத்துள்ளது என இந்திரா காந்தி விவகார சிறப்பு பணிக்குழு தலைவர் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை தலைவரை கூடிய விரைவில் சந்தித்து பிரசன்னா டீக்‌ஷாவை மீட்பது தொடர்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிக்கை முன் வைக்கவுள்ளோம் என்றும் அருண் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தியின் விவகாரம் குறித்து பிரான்ஸ் நாட்டின் இண்டர்போல் காவல் துறையிடம் முறையீடு முன் வைத்ததாகவும்,

தற்பொழுது அவர்களிடத்திலிருந்து அழைப்பு கிடைத்துள்ளது எனவும், மிக விரைவில் பிரான்ஸ் செல்ல உள்ளதாகவும் அருண் தெரிவித்துள்ளார்.