கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினரின் செயற்பாடுகள் குறித்து மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
குறித்த முகாமிலிருந்து கழிவுகளை ஓரிடத்தில் குவிப்பதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் அவற்றை எரிப்பதனால் பாடசாலைச் சூழல் மாசடைவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பாடசாலையின் பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் இவ்வாறு துர்நாற்றம் விசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
விசேட பாடசாலை நாளான இன்று (சனிக்கிழமை) பாடசாலைக்கு பெற்றோர் சென்றிருந்த சமயம் நச்சுமருந்து கலந்த வித்தியாசமான காற்றை சுவாசித்தது போன்ற உணர்வு காணப்பட்டதாக பெற்றோர் பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
பாடசாலைச் சூழலை மாசுபடுத்தும் வகையில் படையினர் முகாம் அமைத்துள்ள பகுதியில் அண்மை நாட்களாக துர்நாற்றம் வீசுகின்றமை குறித்து தானும் உணர்ந்துள்ளதாகவும், பல பெற்றோர், மாணவர்கள் இவ்விடயம் குறித்து கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் பெற்றோரிடம் தெரிவித்த பாடசாலை முதல்வர், இவ்விடயத்தை மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாகவும் தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாடசாலைக் காணி மற்றும் விளையாட்டு மைதான காணிகளில் முகாம் அமைத்துள்ள படையினர் கடந்த ஆண்டளவில் ஒருபகுதி காணியை விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட காணியில் தரம் 4,5 வகுப்புக்கள் நடத்தப்பட்டுவருகின்றன. 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் குறித்த பாடசாலைக்கு இட நெருக்கடி காணப்படும் நிலையில் படை முகாமை அகற்றி பாடசாலையின் இடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்வேறு வகையிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் படையினரின் இவ்வாறான செயற்பாடு தொடர்பில் பாடசாலை சமூகமும், பெற்றோரும் விசனம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு தரமான பாடசாலை சூழலை ஏற்படுத்தி தருமாறும், படையினர் வசமுள்ள பாடசாலை காணியை விடுவித்து பௌதீக வள பற்றாக்குறைகளை சீர் செய்து தருமாறும் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.