நியூசிலாந்து படுகொலை சம்பவம்:வீடியோவை பகிர்ந்தவருக்கு பிணை மறுப்பு!

நியூசிலாந்து மசூதி படுகொலை சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவர்களை பொலிசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவரை விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று நியூசிலாந்தில் உள்ள இரு மசூதிகளில் துப்பாக்கியுடன் நுழைந்த பிரென்டன் டாரன்ட் கண்மூடித்தனமாக சுட்டதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இக்கொடூர சம்பவத்தை பிரென்டன் நேரலை செய்திருந்தார். அது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 1.5 மில்லியன் வீடியோ காட்சிகளை நீக்கியுள்ளதாக பேஸ்புக் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் குறித்த வீடியோவை பகிர்ந்த நியூசிலாந்து மக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட நபர்கள் மீது தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது எனவும்,

பேஸ்புக் நிர்வாகம் குறித்த வீடியோவை பகிர்ந்த பயனாளர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கூறி நியூசிலாந்து தொழிலதிபர் பிலிப் நேவில் என்பவரை கைது செய்துள்ள பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 44 வயதான பிலிப் நேவில் கிறைஸ்ட்சர்ச் நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளார்.

பொதுமக்களை கலவரமடையச் செய்யும் நோக்கில் படுகொலை வீடியோவை பகிர்ந்துள்ளதால் அவருக்கு பிணை வழங்கவும் நீதிமன்றம் மறுத்துள்ளது.

முன்னதாக இந்தே விவகாரத்தில் தொடர்புடைய இளைஞர் ஒருவரும் நியூசிலாந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.