நான் ஹீரோ அல்ல: துப்பாக்கிச்சூட்டை முடிவுக்கு கொண்டு வந்தவரின் தன்னடக்க வீடியோ!

நியூஸிலாந்து மசூதியில் ஈவிரக்கமின்றி மக்களை கொன்று குவித்து விட்டு, மீண்டும் அடுத்த மசூதிக்கு சென்ற தீவிரவாதி, இன்னொரு துப்பாக்கியை எடுக்கச் சென்றபோது, அவனை பயமுறுத்தி ஓட வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு ஹீரோவின் தன்னடக்க பேட்டி வெளியாகியுள்ளது.

Al Noor மசூதியில் நின்று நிதானமாக 49 பேரை கொன்று குவித்த பிரெண்டன் என்ற அவுஸ்திரேலிய தீவிரவாதி, தனது காரில் ஏறி அங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள Linwood மசூதிக்கு சென்றுள்ளான்.

அங்கும் ஏழு பேரை துப்பாக்கியால் சுட்ட அவன், இன்னொரு துப்பாக்கியை எடுக்கச் சென்றபோது Abdul Aziz(48) என்பவர், அவன் கீழே போட்டுச் சென்ற துப்பாக்கியை எடுத்து கத்திக் கொண்டே அவனுக்கு பின்னால் ஓடியிருக்கிறார்.

அவன் கீழே போட்ட துப்பாக்கியை எடுத்த Abdul, அந்த துப்பாக்கியை பிரெண்டனின் கார் மீது வீசியிருக்கிறார்.

வேகமாக கார் மீது வீசப்பட்ட துப்பாக்கி கார் கண்ணாடியை உடைக்க, தன்னை யாரோ துப்பாக்கியால் சுடுவதாக எண்ணி காரை எடுத்துக் கொண்டு விரைந்திருக்கிறான் பிரெண்டன்.

Abdulஇன் நடவடிக்கையால் மேலும் பலர் கொல்லப்படுவது தடுக்கப்பட்டதையடுத்து அவரை பலரும் ஹீரோ என்று புகழ, தான் ஹீரோ அல்ல, மக்களை காப்பாற்றியதும் தான் அல்ல, கடவுள்தான் என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார் Abdul.

Abdul அந்த தீவிரவாதியை துரத்தும் அந்த நேரத்தில் அப்பா வந்து விடுங்கள் என்று கதறியபடி, அவரது நான்கு பிள்ளைகளும் அதே மசூதிக்குள்தான் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.