ஓய்வை அறிவித்த டுமினி!

உலகக்கிண்ணம் போட்டிக்கு பின் ஓய்வு பெற போவதாக தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜே.பி. டுமினி அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டரான ஜே.பி. டுமினி (34) அணிக்காக 46 டெஸ்ட், 193 ஒருநாள் மற்றும் 78 டி-20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டு, முதல் தர கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வினை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் உலகக்கிண்ணம் தொடருக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக டுமினி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கடந்த சில மாதங்களாகவே நான் என்னுடைய எதிர்கால வாழ்க்கை குறித்து யோசனை செய்து வருகிறேன். எதிர்காலத்தை நோக்கி முன்னெடுத்து செல்வதற்கான சில வாய்ப்புகள் எனக்கு கிடைத்திருக்கிறது.

இதுபோன்ற ஒரு முடிவு எளிதானது அல்ல என்றாலும், இதனை கடந்து செல்ல நல்ல நேரம் என்று நான் நினைக்கிறேன். சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால் வளர்ந்து வரும் என்னுடைய குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்.

கடந்த வருடங்களில் என் அணியினர், பயிற்சியாளர்கள், குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து எனக்கு கிடைத்த ஆதரவுக்காக எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (39), உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.