சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜபெருமாள். இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் கடந்த 3 மாதங்களாக சினிமா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சினிமா நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும் அதில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து, நேற்று மாலை அந்த சினிமா நிறுவனத்தில் சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ராஜ பெருமாள், சுரேஷ், பாலாஜி, ஆகிய 3 பேரை பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், அங்கிருந்த 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராஜபெருமாள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருக்கானி மூவிஸ் என்ற பெயரில் பெயர் பலகை வைத்து சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார் என்பது தெரியவந்தது.
அந்த நிறுவனத்திற்கு நடிக்கும் ஆசையில் வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை புதிய படத்தில் கதாநாயகி வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பல லட்சம் சம்பாதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இதே போன்று 10-க்கும் மேற்பட்ட பெண்களை சினிமா வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் இவர்கள் பல பெண்களை ஏமாற்றியிருப்பார்கள் என்ற நோக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.






