அந்த பெண்ணின் கதறலைக் கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது!

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கதறலைக் கேட்டு தனது இதயம் நொறுங்கிவிட்டதாக நடிகர் கதிர் ட்வீட் செய்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல், 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், அதில் இளம்பெண் ஒருவர் அந்த கும்பலிடம் சிக்கி கதறும் வீடியோ வெளியானது நெஞ்சை பதை பதைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘மனித உருவில் இருக்கும் அந்த மிருகங்களுக்கு கருணையே காட்டக் கூடாது, ஆதரவும் கூடாது. அந்தப் பெண்ணின் குரலைக் கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் இயக்குநர் கரு.பழனியப்பன் கூறுகையில், ‘பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண் பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள்.

பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண் பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை’ என தெரிவித்துள்ளார்.