திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகி இல்லத் திருமண விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிறுவன தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் கலந்து கொண்டனர்.
அவ்விழா முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், தேமுதிக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீது எனக்கு நல்ல மரியாதை உள்ளது.
என்னுடைய வயதிற்கு நான் அறிவுரை சொல்லக்கூடாது. பத்திரிக்கையாளர்களை ஒருமையாக பேசி அவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டாம். இதுவரை எந்த பெரிய கட்சியும் எங்களை கூட்டணிக்கு அழைக்கவில்லை.
மக்கள் தொகையில் 27 சதவீதத்தைவிட குறைவாக உள்ள சமுதாய கட்சிகளுக்கு போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்கும் போது எங்களுக்கு வாய்ப்பளிக்காதது வேதனை அளிக்கிறது.
100 அல்ல ஒரு ஓட்டு வைத்திருப்பவர்கள் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள். சசிகலா இருந்திருந்தால் என்னையும், அன்சாரியையும் கூட்டனிக்கு அழைத்து பேசி வாய்ப்பளித்திருக்கலாம்.
பல ஆண்டுகளாக போராடி நம் முன்னோர்கள் உருவாக்கி கொடுத்த சமூக நீதிக்கு சவாலான தேர்தல் இது. மாற்றம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.






