ஜெனீவாவில் வெடிக்கப்போகும் முரண்பாடு???

கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் பதவிக்கு வந்த ஐ.தே.க அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் – நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த முரண்பாடு இப்போது ஜெனீவாவில் பற்றியெரியும் சூழல் உருவாகியிருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தரப்புகளும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை மீது வரும் 20ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

அதற்குப் பின்னர் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது. இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவது என்றும், அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது, வெளிவிவகார அமைச்சின் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஜெனீவாவுக்கு இம்முறை கொழும்பில் இருந்து அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று வெளிவிவகார அமைச்சினால் முடிவு செய்யப்பட்டதுடன், ஜெனீவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதி அசீஸ் ஏனைய அதிகாரிகளுடன் இந்த விவகாரங்களைக் கையாளுவார் என்றும் அறிவிக்கப்படிருந்தது.

இந்தச் சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சார்பில் ஜெனீவா கூட்டத்தொடருக்கு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க ஆகியோரை அனுப்பவுள்ளதாக கூறியிருக்கிறார்.

போர் முடிந்து 10 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் பழைய காயங்களைக் கிளறிக் கொண்டிருக்காமல் எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்ள ஐ.நா அனுமதிக்க வேண்டும் என்றும், ஐ.நாவை அழுத்தங்கள் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் கோருவதற்கே அவர்களைத் தாம் அனுப்பவுள்ளதாகவும், ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

இதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்வைக்க வேண்டாம் என்பதும், அதற்கு இணங்குவதில்லை என்பதும் தான் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்பதை உணர முடிகிறது.

ஆனால் அரசாங்கமோ அதற்கு நேர் எதிர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறது. பிரித்தானியா முன்வைக்கவுள்ள தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது.

இப்படியான நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எந்தத் தரப்பினது கருத்து அதிகாரபூர்வமானதாக இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஜெனீவாவுக்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து ஜனாதிபதி அனுப்பும் குழு செயற்படப் போகிறதா அல்லது தனித்துச் செயற்படப்போகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஜெனீவா தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பிய போது அது பற்றி தனக்குத் தெரியாது என்றும், ஆனாலும் அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கையை தீர்மானிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கே உரியது என்றும் பதிலளித்திருக்கிறார்.

இப்படியான நிலையில் ஜெனீவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகளின் அதிகாரம் வலுவிழக்கச் செய்யப்படும் சாத்தியங்கள் உள்ளன. அரசாங்கத்தில் இணைந்திராதவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன.

ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் பயணங்களின் போதும் அமைச்சர்களாக இல்லாத தமது கட்சித் தலைவர்களை அதிகாரபூர்வ பேச்சுக்களில் பங்கேற்க வைத்திருந்தார். அதே நிலையைத் தான் மீண்டும் ஜெனீவாவில் அவர் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதும், ஒன்றுக்கொன்று முரண்பட்ட தலைமைத்துவங்கள் இருப்பதும் வெளிப்படப் போகிறது.

அது மாத்திரமின்றி இதில் எந்தத் தரப்புடன் தொடர்புகளை வைத்துக் கொள்வது, பேச்சுக்களை நடத்துவது, இணைந்து பயணிப்பது என்ற குழப்பங்களும் கூடவே சர்வதேச சமூகத்துக்கு ஏற்படப் போகிறது.

2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றாத நிலையில் தான் அதற்கு 2017இல் இரண்டு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதுவும் நிறைவேறாத நிலையில் தான் மீண்டும் கால அவகாசத்தைக் கொடுக்க சர்வதேச சமூகம் முற்பட்டுள்ளது.

இந்தக் கால அவகாசத்தையும் கூட ஏற்று செயற்படுவதில்லை என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருக்கிறது. நடந்ததை மறந்து விட்டு கடந்து போவோம் என்பதே அவரது இப்போதைய நிலைப்பாடு.

வெளியார் யாரும் தலையிட வேண்டாம், உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்வோம் என்பதையே ஜனாதிபதி தரப்புக் குழுவினர் ஜெனீவாவில் கூறப் போகின்றனர். முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க எற்கனவே மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஜெனீவாவில் எதைக் கூறினார் என்பது யாவரும் அறிந்தது.

போர்க் குற்றங்கள் நடக்கவேயில்லை என்பதையே அவர் வலியுறுத்தியவர். அதனையே மீண்டும் அவரும் அவரது குழுவினரும் ஜெனீவாவில் கூறப்போகின்றனர். இம்முறை கவர்ச்சியான புதுமுகமாக சுரேன் ராகவன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

எந்தக் கால அவகாசத்திற்கும் அல்லது காலக்கெடுவுக்கும் அப்பால் செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு எதிர்மாறான நிலையில் ஐ.தே.க அரசாங்கம் இருக்கிறது.

ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலதிக கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதனை நிறைவேற்றுவதன் மூலம் சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பும் வெவ்வேறு அணுகுமுறைகளை கடைப்பிடிக்கப் போவதாக கூறியிருந்தாலும் அவர்களின் பிரதான இலக்கு ஒன்றுதான்.

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தையும், நாட்டையும் விடுவிப்பது தான் அது, அதில் இரண்டு தரப்புக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. முரண்பாடும் இல்லை. வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால் அதில் இந்த விடயம் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் செயல்முறை, தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டு வரும் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கும் ஒரு தந்திரோபாயமாக அடையாப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜெனீவா தீர்மானத்திற்கு இணங்கியதன் மூலமே மஹிந்த ராஜபக்ஷவையும், இராணுவ அதிகாரிகளையும் மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்ற முடிந்துள்ளது என்றும் பொருளாதாரத் தடைகளில் இருந்து நாட்டை விடுவிக்க முடிந்தது என்றும் வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது.

இணை அனுசரணை வழங்கியதால் தான் மாலி உள்ளிட்ட நாடுகளில் இலங்கைப் படையினர் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்ற முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பயிற்சிகளைப் பெற முடிகிறது என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஜெனீவா தீர்மானத்தைிற்கு இணங்கியதால் தான் நெருக்கடிகளில் இருந்து தப்பித்து இலங்கை சர்வதேச ஆதரவைப் பெற்றிருக்கிறது என்றும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் ஜெனீவா தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய நிலை உருவாகிவிடும் என்ற அச்சம் ஜனாதிபதிக்கு இருக்கிறது.

அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கே அவர் ஐ.நாவின் அழுத்தங்களில் இருந்து வெளியேற பார்க்கிறார். தமது நோக்கம் போர்க்குற்றசாட்டுகளில் இருந்து படையிரை விடுவிப்பது தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

படையினரை பேர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பது தான் ஜனாதிபதியின் இலங்காக இருக்கிறதே தவிர அவரை ஆட்சியில் அமர்த்துவதில் முக்கிய பங்காற்றிய பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கான நீதியைப் பற்றி அவர் பேசத் தயாராக இல்லை.

படையிரை பாதுகாப்பதன் ஊடாக சிங்கள மக்களின் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் இப்போதைய எதிர்பார்ப்பு. குற்றமிழைத்த படையினரை பாதுபாப்பதன் ஊடாக அவர் அதனை அடைவதற்கும் தயாராகியிருக்கிறார்.

முன்பெல்லாம் தவறிழைத்த படையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிவந்த ஜனாதிபதி இப்போது அப்படி பேசுவதில்லை. இப்போது அவர் பழைய காயங்களை கிளறாமல் கடந்து கெல்வது பற்றியே பேசுகிறார். ரணில் விக்ரமசிங்க மறப்போம், மன்னிப்போம் என்றார்.

அதனைத் தான் வேறு சில வார்தைகளால் ஜனாதிபதியும் பேசியிருக்கிறார். இப்போதைய நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் எண்ணம் இரண்டு தரப்புகளிடமும் இல்லை. குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றும் இலக்கு மட்டுமே அவர்களிடம் இருக்கிறது.

இப்படியான நிலையில் இருவேறு இலக்குகளுடன் ஜெனீவா களத்தை சந்திக்கவுள்ள இலங்கை அரசு சர்வதேச சமூகத்தினது மாத்திரமின்றி தமிழ் மக்களின் நம்பிக்கையையும் அடியோடு இழக்கப்போகிறது. அதனைத் தான் இப்போதைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.