புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புல்வாமாவில் கடந்த 14-ம் திகதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இத்தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டிற்கு தொடர்பு இருப்பதாக இந்திய பிரதமர் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு பிரதமர் மறுப்பு தெரிவித்ததோடு, அறிக்கை சமர்ப்பித்தால் நடவடிக்கைக்கு எடுக்கவும் தயார் என கூறியிருந்தார்.
சம்பவம் நடந்தது முதலே இந்தியாவின் தேசிய புலனாய்வு மையமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முக்கியமான சிசிடிசி காட்சியினை அவர்கள் கைப்பற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது.
அந்த காட்சியில், 2010-11 ஆண்டுகளில் தயாரான “the red Eeco” கார் தான் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை அடையாளம் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கலரை மாற்றி பயன்படுத்தியுள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த அடில் அஹமது டார் அந்த காரை ஒட்டி வருவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. ஒரு நிமிடத்திற்குள் மட்டும் இரண்டு முறை அந்த காரை கொண்டு, ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் மீது மோத முயற்சித்துள்ளார்.
மேலும், அந்த கார் ஜம்முவில் இருந்தே கான்வாய்களை பின்தொடர்ந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது அந்த காரின் உரிமையாளரை அடையாளம் கண்டு பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று முதல் காரின் உரிமையாளர் மாயமாகியிருக்கிறார்.
இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், அந்த கார் நீண்ட நேரமாக பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மூன்றாவது கான்வாயில் இருந்த நான்கு ராணுவ வீரர்கள், 2 அல்லது 3 முறை எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கார் வலது மற்றும் இடது என மாறிமாறிக்கொண்டே சுற்றி வந்தது என கூறியுள்ளார்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு விசாரணையில், துணை ராணுவ வீரர்கள் 2018-ம் ஆண்டு கோடை காலத்தில் அவருடைய வீட்டை தீயிட்டு கொளுத்தியத்திலிருந்தே அடில் அஹமது, அதிருப்தியில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
உள்ளூரில் செயல்பட்டு ஜேம் இயக்கத்தின் மூலம் தான் அடில் அஹமது பயங்கரவாதியாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால் இதுகுறித்து முழுத்தகவலையும் அளிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.






