இன்று முழு அடைப்பு போராட்டம்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

முக்கியமான அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, அனைத்து செயற்பாடுகளும் இன்று முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டிருக்கும் என்றும், போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இன்று காலை 8.30 மணியளவில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில், வடக்கு, கிழக்கில் இருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒன்று கூடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.