திருப்பூரில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் பொதுப்பணித் துறை அலுவலகம் இரவில் களியாட்ட விடுதியாகச் செயல்படுவதாக அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த அவிநாசி சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தை ஒட்டி ஏராளமான நிலம் காலியாக உள்ளது. எனவே ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை அடுத்து இந்த இடத்தில் பொதுப்பணித் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு மருத்துவக் கட்டிடப் பணிகளுக்கான கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம், உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் செயல்பட்டு வருகின்றன. நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்தாலும் இதன் அருகில் மக்கள் குடியிருப்பு எதுவும் இல்லை.
பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு வடபுறம் பள்ளிவாசல் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு பகுதிக்கும் இடையே காலி இடத்தில் ஏராளமான செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.
இந்த இடத்தில் அண்மைக் காலமாக காலி மதுபான பாட்டில்களும், ஆணுறை உள்ளிட்ட கழிவுப் பொருட்களும் வீசப்பட்டுள்ளன.
இப்பகுதிக்குள் அந்நியர்கள் யாரும் நுழைய முடியாத நிலையில் பொதுப் பணித் துறை அலுவலகத்தைப் பயன்படுத்தித்தான் மது அருந்துவது, இரவில் இதர சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரித்தபோது அங்கு பகலில் அலுவலகம் செயல்படுகிறதென்றால், இரவில் மதுபானம் அருந்துவது, சீட்டாட்டம் மற்றும் விலை மகளிரை அழைத்து வருவது போன்ற செயல்கள் நடைபெறுவதாக தெரியவந்தது.
பெண் அலுவலர்கள் சிலரும் இங்கு பணியாற்றுகின்றனர். இந்த பொதுப்பணித் துறை அலுவலகத்தை வெளியாட்களின் ஒத்துழைப்புடன் சில அதிகாரிகள் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தி வருவது அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
அலுவலகத்திற்கு உள்ளேயே படுக்கை வசதியுடன் ஓய்வறையும் உள்ளது. இந்த அலுவலகத்தில் இது போன்ற வசதிகள் செய்து வைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.






