திருமணமான 17 மாதங்களில் உயிரிழந்த தமிழக வீரர்: கதறி அழுத இளம் மனைவி…

காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சுப்ரமணியம் இறப்பு செய்தி குறித்து அரசு சார்பில் இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை என அவரின் தந்தை கூறியுள்ளார்.

காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலாபேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்ரமணியன் உள்பட 2 தமிழக வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுப்ரமணியனுக்கு 17 மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கணவர் இறந்த செய்தியை கேட்டு கிருஷ்ணவேணி கதறி அழுதது மனதை உருக்கும் வகையில் இருந்தது.

மகன் இறப்பு குறித்து சுப்ரமணியனின் தந்தை கணபதி அளித்த பேட்டியில், சுப்ரமணியன் இறந்தது குறித்து எந்த தகவலும், தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், உறுதியான தகவல் தெரியாத காரணத்தினால் குழப்பமான நிலையில் இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்துவதற்காக கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

IIT வரை படித்துள்ள 28 வயதான சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப். பொலிசில் சேர்ந்தார். உத்திரபிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த அவர் சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

தைப்பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த ஞாயிறன்று தான் ஊரிலிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

நேற்று மதியம் 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் இறுதியாக பேசிய சுப்ரமணியம் தான் வேலைக்கு செல்வதாக அவரிடம் கூறியதாக தெரியவந்துள்ளது.