வேதனையுடன் கருத்து பதிவிட்ட வீரேந்தர் சேவாக்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தொகுதி வேட்பாளர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தங்களுடைய கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களில் எல்லாம், மக்களுக்கு பிரபலமான முகங்களை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளது.

அதன்படி சினிமா நட்சத்திரங்கள் துவங்கி, கிரிக்கெட் பிரபலங்கள் வரை பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் ஹரியானா மாநிலத்தில் ரோஹ்தர் தொகுதியில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக செய்திகள் பரவின.

இதற்கு பாஜகவின் ஹரியானா மாநிலத் தலைவர் சுபாஷ் பரலா முற்றிலுமாக மறுப்பு தெரிவித்திருந்தாலும் கூட, சம்மந்தபட்ட சேவாக் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வதந்தியைப் போல சில விடயங்கள் எப்பொழுதுமே மாறாது. 2014-ம் ஆண்டு வந்ததை போலவே 2019 இல் வந்திருக்கும் வதந்தியில் எந்த புதுமையும் இல்லை. அப்போதும் ஆர்வம் இல்லை, இப்போது ஆர்வம் இல்லை.” என பதிவிட்டுள்ளார்.