தமிழகத்தை காப்பாற்ற அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட உயர் நீதிமன்றம்.!

செயற்கைகோள் கண்காணிப்பின் மூலம் மணல் கடத்தலை தடுக்கலாம் என உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டம்,மண்மங்கலம் தோட்டக்குறிச்சி பகுதியுள்ள காவிரி ஆற்றில் இரவு முழுதும் மணல் திருட்டுநடைபெறுகிறது.

அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது.

சிறப்புக்குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அமல் படுத்தப்படவில்லை.

ஆகவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத்தரப்பில், மணல் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மனுதாரர் தரப்பில், அரசுப் பணியில் உள்ளவர்களே, மணல் கடத்தலில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், அரசுப்பணியில் உள்ளவர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டால், அவர் மீது ஏன் துறை ரீதியான அதிகபட்ச நடவடிக்கையை எடுக்கக்கூடாது? எனகேள்வி எழுப்பினர்.

அதோடு, மணல்கடத்தலைத் தடுக்க கண்காணிப்பாளர்களை நியமிப்பது போதிய பலனளிப்பதாக தெரியவில்லை.

செயற்கைகோள்கள் மூலம் புகைப்படங்களை எடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை பயன்படுத்தி மணல் கடத்தலை தடுக்கலாமேஎன கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவ, சென்னை ஐஐடியின் இயக்குநரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்ப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர் வழக்கினை பிப்ரவரி 13 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.