டோனியைப் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை! கொந்தளித்த பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி கடந்த ஆண்டு மோசமான பார்மில் இருந்தார். துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சொதப்பி வந்த அவர், 2019யில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று அரைசதங்கள் அடித்து மீண்டும் பார்முக்கு வந்தார்.

எனினும் சிலர், டோனி அதிரடியாக ஆடவில்லை என சில காரணங்களைக் கூறி அவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘டோனியை பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை. அவரை பற்றி பேசுகிறவர்களுக்கு கிரிக்கெட் பற்றி ஏதாவது தெரியுமா? சச்சின், கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோரைப் போன்றவர் டோனி.

இது போன்றவர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வருவார்கள். டோனி இந்த விளையாட்டின் அணிகலன். அவர் நம்பர் 1 டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தவர். இரண்டு உலகக் கோப்பையை தன் பெயரில் வைத்துள்ளவர். அவர் எந்த டிராபியை வெல்லவில்லை? கூறுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், டோனி குறித்து பேசும் முன் மக்கள் கிரிக்கெட் குறித்து ஓரிரு விடயங்களை தெரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். இது போன்ற ஒருவரை ஒரே இரவில் நீங்கள் பெற்று விட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், துடுப்பாட்ட வீரர்கள் அவுட் ஆன போதிலும் கடைசி வரை போராடிய டோனி 39 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.