தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தவறான அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தனது கணவர் பலிகடாவாக்கப்பட்டுள்ளதாக, உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவருடன் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவிப் பேராசிரியார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கின்றனர். அவர்களுக்கு பலமுறை ஜாமீன் கேட்டு மனு அளித்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனினும், உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமீன் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் முருகனின் மனைவி சுஜா முயற்சித்து வருகிறார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக சுஜா கூறுகையில்,
‘என் கணவர் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஆனால், இன்று வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. திட்டமிட்டே என் கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். யாரை காப்பாற்ற என் கணவருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் உள்ளது என்று தெரியவில்லை.
ஆனால், அது பெரிய இடத்தில் இருக்கும் நபர் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. கொலை செய்த நேரடி குற்றவாளிகளுக்குக்கூட 90 நாட்களில் ஜாமீன் கிடைத்து விடுகிறது. ஆனால், எந்த ஒரு குற்றமும் என் கணவர் செய்யாமல் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது வேதனைக்குரியது.
எனது கணவருக்கும், நிர்மலாதேவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரே தெரிவித்துவிட்டார். இப்படியான சூழலில் கூட எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் கேட்டு மனு அளித்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
என் கணவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று திட்டவட்டமாக உள்ளனர். என் கணவருக்கு எந்த தகவலும் தெரியாது. ஆனால், அவரை வெளியே விடாமல் குற்றத்தை அவர் மீது திசை திருப்பலாம் என்று நினைக்கின்றனர். எஸ்.பி.ராஜேஸ்வரி முறையான விசாரணை செய்யவில்லை. எப்படி விசாரணை நடத்தக்கூடாது என்பதற்கு அவர் உதாரணம்.
சி.பி.சி.ஐ.டி பொலிசுக்கு நீதிமன்றம் போதிய கால அவகாசம் கொடுத்தும், ஆவணங்களை சமர்பிக்காமல் தாமதித்து வருகிறது. என் கணவர் தவறு செய்து தண்டனை வழங்கப்பட்டிருந்தால் கூட இவ்வளவு நாள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கமாட்டார். தண்டனைக் காலத்துக்கு அதிகமாகவே தற்போது சிறையில் உள்ளார்.
எனவே, என் கணவருக்கு விரைவாக ஜாமீன் வழங்க வேண்டும். சந்தானம் கமிட்டி விசாரணையை வெளியிட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிம்மதி இல்லாத வாழ்க்கையை தான் நான் வாழ்ந்து வருகிறேன். இரவு நேரங்களில் தூக்கம் வராமல் என் கணவரின் நினைவு வாட்டுகிறது.
என் கணவரை வஞ்சித்துவிட்டு அவர்கள் தப்பிக்க வேண்டும் என குறிப்பிட்ட சிலர் செயல்பட்டு வருகின்றனர். நாம் வாழ்வது சுதந்திர நாடுதானா? அதிகாரத்தில் இல்லை என்றால் நியாயம் கிடைக்காதா என்று தோன்ற வைக்கிறது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.






