ஆதரவற்ற சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம்!

ஆதரவற்ற நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளிடம் ஆபாச வீடியோவைப் போட்டுக்காண்பித்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக மேலாளர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

திருவண்ணாமலை மகாசக்தி நகர் பகுதியில், அரசு அனுமதியின்றி அருணை குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்தக் காப்பகத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறார்கள்.

மேலும், இந்தக் காப்பகத்துக்கு முறையான அனுமதி வாங்கினார்களா எனத் தெரியவில்லை என்று மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய புகார் சென்றது.

புகாரின் பேரில் அதிரடி சோதனை நடத்தினார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. அப்போது காப்பகத்தில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 15 குழந்தைகளிடம் விசாரித்தபோது, காப்பக மேலாளர் நல்லவன்பாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (30) என்பவர் காப்பகத்திலேயே தங்கிக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கண்ணீருடன் கூறியுள்ளனர் சிறுமிகள்.

மேலும், சிறுமிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ‘காப்பகத்தில் உள்ள கம்ப்யூட்டரில், இரவு நேரத்தில் ஆபாசப் படங்களைப் போட்டுக்காண்பித்து பார்க்கச் சொல்லுகிறார்.

எங்களிடம் அத்துமீறி நடந்துக்கொள்ள முயற்சி செய்கிறார். இந்தக் கொடுமையை எதிர்த்துக் கேட்டால் காப்பகத்தைவிட்டு வெளியே அனுப்பிவிடுவேன். சோறு தண்ணி இல்லாமல் அலையவிடுவேன். அப்புறம் சாக வேண்டியதுதான் என வினோத்குமார் மிரட்டுகிறார் என்று சிறுமிகள் கூறியது போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதனையடுத்து காப்பக மேலாளர் வினோத்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தது போலீஸ். மேலும், காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளை மீட்டு வேறு காப்பகத்துக்கு மாற்ற உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர்.

அனுமதியின்றி சட்டவிரோதமாகக் காப்பகம் நடத்தியதன் நோக்கம் என்ன, இதன் பின்புலத்தில் யாராவது முக்கிய ஆட்கள் இருக்கிறார்களா, காப்பகம் நடத்த நிதி எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் முறைகேடுகள் நடந்தால் கடும் நடவடிக்கைகள் பாயும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து குழந்தைகள் இல்லங்களும், மாவட்ட ஆட்சித் தலைவர், திருவண்ணாமலை என்ற பெயரில் ரூ.3,000-க்கான வங்கி வரைவோலை மற்றும் கருத்துருவுடன் மாவட்டச் சமூகநல அலுவலகத்தை அணுகி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் 2014-ன் கீழ் பதிவு செய்வது அவசியம். பதிவு செய்யத் தவறிய குழந்தைகள் இல்லங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் ரத்து செய்யப்பட்டும் இல்லத்தை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இம்மாவட்டத்தில் செயல்பட்டுவரும் முதியோர் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் ஆகியவை உடனடியாக மாவட்டச் சமூகநல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தவறும்பட்சத்தில், மாவட்டச் சமூகநல அலுவலரால் உடனடியாக விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என எச்சரித்தார்.