வெளியானது கலெக்டர் ரோகிணியின் வீடியோ – களமிறக்கப்படும் சைபர் கிரைம் போலீசார்.!

இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் செயலி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக் டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது.

எந்த வித ஒழுங்குமுறைக்கு இலலாமல் டிக் டாக் செயலி செயல்படும் விதமும், அதில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையைத் தொலைப்பதும் ஒருபுறம் கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப் போனதைப் போன்று, தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

டிக் டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதில் இடம்பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவுபடுத்துகின்றன. எனவே டிக்டாக் செயலியைக் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என கடந்த மாதம் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், டிக் டாக்கின் மூலம் சேலம் கலெக்டர் ரோகிணியின் பல புகைப்படங்களுக்குப் பின்பாட்டு போட்டு வீடியோ வெளியிட்டு வாட்ஸ் அப்பில் பரப்பியிருப்பது அரசு தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிணியின் பல புகைப்படங்களைத் திரட்டி, அதற்குப் பின் பாடலாக நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் வரும் ‘அடிநெஞ்சு அனலாகவே… தீ அள்ளி ஊத்துற’ என்ற பாடலை வைத்து டிக் டாக் மூலம் இந்த வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள்.

21 செகண்ட் ஓடும் இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் சைபர் க்ரைமுக்குத் தகவல் கொடுத்து இந்த வீடியோவை முடக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.