ஏப்ரல் 1, 2019 முதல் விவசாயியைத் திருமணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் 1 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்படும். ஆனால் அந்த விவசாயி அனகொடு சேவா சகாக்கரி சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இந்தப் பணம் டெபாசிட் செய்யப்படும்.
சமூக ரீதியாக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் சிக்கல் உள்ள விவசாயிகள் இந்தத் திட்டம் கீழ் பயன் அடைவார்கள். உத்தர கர்நாடகாவில் உள்ள பல இளம் பெண்கள் பெங்களூருவில் ஐ.டி., வேலையில் அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது அரசு வேலையில் உள்ளவர்களைத் திருமணம் செய்யவே விரும்புகின்றனர். எனவே விவசாயக் குடும்பத்தில் தற்போதும் தொடர்ந்து விவசாயம் செய்துவரும் ஆண்களுக்குப் பெண் கிடைப்பதில் பல சிக்கல் உள்ளது.
இதைத் தடுக்கவே இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இந்தத் திட்டம் கீழ் பணம் பெற வேண்டுமெனில் “அனகொடு சேவா சகாக்கரி சங்கத்தில்” உறுப்பினராக இருப்பது மட்டும் இல்லாமல் ஆண்டுக்கு 3 லட்சத்திற்கும் குறையாமல் பரிவர்த்தனை செய்து இருக்கவேண்டும். அனகொடு கிராமத்தில் உள்ள 300 வீடுகளில் பெரும்பாலானவர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளார்கள் என்று அனகொடு சேவா சகாக்கரி சங்கத்தின் தலைவர் என் கே பட் தெரிவித்துள்ளார்.