‘இந்தியன் தாத்தா’வாக மாறிய யாழ் இளைஞன்: பொலிசார் கைது!

சுகாதாரப் பரிசோதகர் போல வேடமிட்டு, பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்காக சுகாதார பரிசோதகர் போல, போலியான ஆவணங்களையும் தயாரித்து வைத்திருந்திருக்கிறார். எனினும், சுகாதார பரிசோதகர்கள் தமது கடமையை செய்ய தவறியதாலேயே, தான் சுகாதார பரிசோதகராக செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று (29) இளைஞனைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேநபர் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் சந்தேகநபரை வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பில் தெரியவருவதாவது-

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர மற்றும் நல்லூர் பொதுச் சகாதார பரிசோதகர்களுக்கு இளைஞன் அறிவித்துள்ளார். எனினும் இளைஞனின் தகவலை ஏற்று பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள் எவரும் சம்பந்தப்பட்ட வியாபார நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த அந்த இளைஞன் பொதுச் சுகாதாரப் பரிசோதர் சேவைக்கான போலி அடையாள அட்டையை தனது பெயரில் தயாரித்து வியாபார நிலையங்களுக்குச் சென்று காலாவதியான மற்றும் சுகாதார சீர்கேடான உணவுப் பண்டங்களை அழித்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் விசாரணைக்கு பொலிஸார் அழைத்த போதும் அந்த இளைஞன் செல்லவில்லை.

இந்த நிலையில் இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் இளைஞன் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று அவர் கைதாகியிருந்தார்.