பாலியல் அடிமையாக இருந்த கொரிய பெண் மரணம்!

இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜப்பான் ராணுவத்தின் விபச்சார விடுதிகளில் பாலியல் அடிமையாக இருந்த கொரிய பெண் ஒருவர் தமது 94 வது வயதில் மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண்ணின் மரணத்தை அடுத்து ஜப்பான் விபச்சார விடுதிகளில் பாலியல் அடிமையாக இருந்து தற்போதும் உயிருடன் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 24 என குறைந்துள்ளது.

லீ என மட்டுமே அறியப்பட்டுவந்த குறித்த பெண்மணி, உடல் நிலை குன்றிய நிலையில் திங்களன்று பகல் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் குடிமக்கள் குழு ஒன்றே இவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இரண்டாம் உலக போரின்பொழுது ஜப்பான் ராணுவம் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்தது.

ராணுவ வீரர்களின் பாலியல் தேவைகளுக்காக பயன்பட்ட இந்த பெண்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 1942 ஆம் ஆண்டு அப்போது 17 வயதான லீ என்ற பெண் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.

அவரை ஜப்பானிய ராணுவ வீரர்கள் கடத்தி சென்றனர். அதன்பின் லீயை வடகிழக்கு சீனாவுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தனர். அங்கு ஜப்பான் ராணுவ வீரர்கள் அவரை பாலியல் அடிமையாக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது, தென்கொரியாவில் வசித்து வந்த லீ தனது 94 வயதில் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார்.

இதற்கு முன் தென்கொரிய அரசு பதிவு செய்திருந்த பாலியல் அடிமைகளின் எண்ணிக்கை 238 ஆக இருந்தது. இவர் மரணம் அடைந்த நிலையில், போர் காலங்களில் பாலியல் அடிமையாகி, பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 24 என குறைந்துள்ளது.

கடந்த 1910 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை தென்கொரியா நாடு ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.