யாழ்ப்பாணத்தில் பாடசாலை செல்லும் மாணவியொருவரை நீண்டகாலமாக துஷ்பிரயோகம் செய்து வந்த ஆசாமியொருவரை பொலிசார் நேற்று (28) மடக்கிப்பிடித்தனர். சிறுமியின் தாயாரின் கள்ளக்காதலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வசிக்கும் மாணவியே பலமாதங்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
தந்தையார் விவாகரத்து பெற்ற நிலையில், தாயும் சிறுமியும் தனித்து வாழ்ந்து வந்தனர். தாயாரின் கள்ளக்காதலனான வாகன உரிமையாளர் ஒருவரே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார். இது குறித்து, சிறுமி தனது தாயாரிற்கு தெரியப்படுத்தியிருந்தார். ஆனால், தாயார் அதைப்பற்றி கவனம் செலுத்தாமல், அது தொடர அனுமதித்திருந்தார்.
இதையடுத்து விரக்தியடைந்த மாணவி, தனது தந்தைக்கு விடயத்தை தெரியப்படுத்தினார். கடந்த வருடம் நவம்பர் மாதம், தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து சிறுமியை மீட்ட பொலிசார், அவரை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தினர். இதை அறிந்த, தாயின் கள்ளக்காதலன் தலைமறைவானார். அவர் இந்தியாவிற்கு தப்பியோடிவிட்டது பின்னர் தெரிய வந்தது.
இந்த நிலையில் அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்தார். மரணச்சடங்கிற்காக, அவர் யாழ்ப்பாணம் வந்த நிலையில், நேற்று அவரை பொலிசார் மடக்கிப்பிடித்தனர்.
இன்று அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிசார் தெரிவித்தனர்.






