பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சிறப்புச் சலுகைகள் பெற்றது உண்மைதான் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், வேறு சிறைக்கு சசிகலா மாற்றப்பட உள்ளார், அவருக்கு இனி பரோல் கிடைக்காது என்பது போன்ற தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில், 2017 பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். அங்கு, விதிகளை மீறி சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், அதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ரூபா பகீர் குற்றச்சாட்டை எழுப்பினார்.
அது தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவைக் கர்நாடக அரசு நியமித்தது.
வினய்குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். அறிக்கையின் விவரங்களை மிகவும் ரகசியமாகவே கர்நாடக அரசு வைத்திருந்தது.
இந்த விவகாரத்தில், டி.ஜி.பி சத்யநாராயணா மீது டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இதனால், ரூபா மீது சத்யநாராயணா மானநஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கைச் சட்டரீதியாகச் சந்திக்க, வினய்குமார் அறிக்கையின் விவரங்களைத் தரும்படித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் கேட்டிருந்தார் ரூபா.
ஆனால், அந்த விவரங்களைத் தராமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் செய்தனர். எனவே, நீதிமன்றத்தை அணுகி அந்த அறிக்கையைப் பெற்றார், ரூபா.
வினய்குமார் அறிக்கையில், “சசிகலா, இளவரசி ஆகியோருக்குச் சிறையில் ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
சசிகலா பயன்படுத்திய சிறை அறைகளுக்குத் திரைச்சீலைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. ஏன் திரைச்சீலைகள் போடப்பட்டன என்று அதிகாரிகளிடம் விசாரித்ததற்கு, ‘சிறை அறைக்குள் பூனைகள் வருகின்றன, அதைத் தடுக்கத் திரைச்சீலைகள் போடப்பட்டன’ என்று கூறியுள்ளனர்.
பெண்களின் சிறையில் ஓர் அறைக்கு நான்கு பேர் வீதம் அடைக்கப்பட வேண்டும். ஆனால், சிறை விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு மட்டும் ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டன.
இதனால் மீதமுள்ள 23 அறைகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாகப் பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சசிகலாவுக்கு தனிச் சமையல் அறை, அந்த அறையில் உணவுப்பொருள்கள், பிரஷர் குக்கர் ஆகியவை இருக்கும் புகைப்படங்களையும் ரூபா அளித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைக்குப் பதில் அளித்துள்ள அதிகாரிகள், ‘சசிகலா அறையில் சமையல் எதுவும் நடக்கவில்லை. சிறை உணவுகளைச் சேமித்து வைக்கவே அங்கு குக்கர் வைக்கப்பட்டிருந்தது’ எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ‘சமையல் செய்ததற்கு அடையாளமாக மஞ்சள்பொடி உள்ளிட்டவைப் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இருக்கின்றன’ என்று வினய்குமார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சசிகலாவும் இளவரசியும் சாதாரண உடைகளில் பைகளுடன் வெளியிலிருந்து சிறைக்குள் வரும் வீடியோ காட்சிகள் குறித்த விசாரணையில், ‘இருவரும் பார்வையாளர்களைச் சந்திக்கச் சென்றுவந்தனர்’ என்று சிறை ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், சிறைக்குள் இருந்து அவர்கள் சென்ற நேரமும், திரும்பி வந்த நேரமும் ஒத்துப்போகவில்லை. விசாரணையிலிருந்து தப்பிக்க, சிறை ஆவணங்களில் தவறான தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவே இதைக் கருத முடியும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரூபாவிடம் பேசினோம். “சிறைத்துறை அதிகாரியாக இருந்தபோது, சிறையை ஆய்வுசெய்து, நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை.
அதை வினய்குமார் அறிக்கையும் உறுதிசெய்துள்ளது. இதன் மூலம் சசிகலா உள்ளிட்ட சிறை கைதிகள் சிறப்புச் சலுகைகள் பெற அப்போது இருந்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உறுதியாகியுள்ளது.
சசிகலா, இளவரசி இருவரும் சாதாரண உடையில் பார்வையாளர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்புவதாகக் குறிப்பிடுகின்றனர்.
பார்வையாளர்களைச் சந்திக்கச் சென்ற நேரமும், மீண்டும் சிறைக்குத் திரும்பும் வீடியோ காட்சிகளின் நேரத்திலும் விதிமீறல் உள்ளதாக வினய்குமார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அதில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான், சசிகலா எங்கே சென்று திரும்பினார் என்ற விவரம் தெரியவரும். இது குறித்துக் கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதிலிருந்து சசிகலா தப்பமுடியாது” என்றார் உறுதியாக.
சசிகலாவுக்குச் சிக்கலா?
பெங்களூரு சிறையில் நடைபெற்ற விதிமீறல்களால் மைசூரு சிறைக்கு சசிகலா மாற்றப்பட வாய்ப்பு உண்டு என்ற செய்திகள் வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தினால் சசிகலாவுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்கிறார்கள் சசிகலா தரப்பினர்.
“இந்த அறிக்கையால் பாதிக்கப்படப்போவது சிறைத்துறை அதிகாரிகள்தான். சசிகலா இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தாகக் கூறுகிறார்கள்.
யாரிடம் எப்போது கொடுத்தார் என்று ஆதாரங்களைக் காட்ட முடியுமா? சசிகலாவுக்கு வழங்கப்பட்ட கட்டில், மெத்தை, டி.வி உள்ளிட்டவற்றுக்குச் சிறைத்துறையில் உரிய முன்அனுமதி வாங்கப்பட்டுள்ளது.
இது தெரியாமல் சிலர் தவறாகக் கருத்துச் சொல்கிறார்கள். சசிகாவுக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் நல்ல நட்பு உள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் இறந்தபோது, குமாராசாமியின் உறவினர் ஒருவர் தஞ்சாவூர் வந்து சசிகலாவிடம் துக்கம் விசாரித்துச் சென்றார்.
எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என நடவடிக்கை எடுக்கக் குமாரசாமி அனுமதிக்கமாட்டார். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், சட்டரீதியாக அதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பது சசிகலாவுக்குத் தெரியும்” என்கிறார்கள்.
– அ.சையது அபுதாஹிர்






