விடுதலைப் புலிகளின் சீருடையுடன் சிக்கிய இளைஞர்களினால் பரபரப்பு….!!

வவுனியாவில் விடுதலை புலிகள் அமைப்பின் சீருடையுடன் புகைப்படம் எடுத்த இளைஞர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலை புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில், அவர் தப்பிச் சென்றுள்ளார். இதன்போது அவரது வீட்டினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது குறித்த சந்தேக நபரின் மடிக்கணினி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.அந்த மடிக்கணினியை சோதனையிட்ட போது, விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 21 பேரின் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.குறித்த இளைஞர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஏனைய இளைஞர்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியாதென மறுத்துள்ளனர். எப்படியிருப்பினும் குறித்த இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.விடுதலைப் புலிகளின் அடையாள அட்டைகள் தயாரிக்க இந்த புகைப்படங்கள் பயன்படுத்தப்படலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றது.

இவ்வாறான புகைப்படங்கள் எடுத்து அதனை வெளிநாட்டிற்கு அனுப்பி பணம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.