பல நாட்களாக போராடிய பிரித்தானிய தாய், தன்னுடைய வாழ்க்கையையே மாற்றவிருந்த கழுத்து அறுவை சிகிச்சை கடைசி நிமிடத்தில் ரத்தானதால் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதான சமந்தா ஸ்மித். இவருக்கு ஜென்சன் (8), மற்றும் ப்ரூக் (7) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமந்தா கடந்த 2017ம் ஆண்டு இணைப்பு திசு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே வரக்கூடிய இத்தகைய நோயால் முதுகெலும்பு மற்றும் மூளை தண்டு சேதமடைந்திருக்கிறது.
இதனால் அவருடைய மூளையினை கழுத்து பகுதியால் தாங்க முடியவில்லை. அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் விரைவில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.
உடனே சமந்தாவும் இணையதளத்தின் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார். இங்கிலாந்தில் அதற்கான அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் இல்லாத காரணத்தால், சமந்தா அமெரிக்காவின் அரசோனாவில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார்.
ஒரு வருடம் கழித்து, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நேற்று தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. இணையதளத்தின் மூலம் திரண்ட £ 250,000 பவுண்டுகள் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் சமந்தாவும் இருந்துள்ளார்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு தயாரான கடைசி நிமிடத்தில், பணம் சேமிக்கப்பட்டிருந்த பார்க்லேஸ் வங்கி, பணம் எடுக்கப்படுவதற்கு தடை விதித்தது.
இதனால் உடனடியாக அவருடைய அறுவை சிகிச்சையை மருத்துவமனை நிர்வாகம் நிறுத்தி வைத்தது. இதனை சிறிதும் எதிர்பாராத சமந்தா, மருத்துவமனையிலேயே 2 மணிநேரமாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அதிகமான பணத்தொகை திடீரென வங்கியில் இருந்து வெளியேறியதால் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், தற்போது வாடிக்கையாளருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இந்த விஷயத்தை தீர்க்க உதவுகிறோம் என கூறியுள்ளது.
ஆனால் வேதனையுடன் பேசியுள்ள சமந்தா, பல மாதங்கள் திட்டமிடப்பட்டு இந்த அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது ரத்தானதால் மருத்துவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் திட்டமிடப்பட்டு மீண்டும் தனக்கு அறுவைசிகிச்சை செய்யப்படும் என நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.






