சமீபத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அறையில், யாகம் செய்தார், என்ற விமர்சனமும், குற்றச்சாட்டும் எழுந்தது. ஆட்சி மற்றும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள இந்த யாகம் நடைபெற்றதாக, கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், பழமை மற்றும் பிரபலமான குற்றாலநாதர் சுவாமி கோயிலில், கடந்த இரண்டு நாட்களாக, நள்ளிரவில், கேரள நம்பூதரிகளைக் கொண்ட யாகம் நடத்திய விவகாரம் வெளியே கசிந்துள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த ஸ்ரீகுமார் நம்பூதரி தலைமையில், 4 பேர், இந்த யாகத்தைச் செய்துள்ளனர். கோயிலில் உள்ள பராசக்தி சன்னதியில், தொடர்ந்து இரண்டு நாட்களாக நள்ளிரவில் யாகம் நடைபெற்றுள்ளது.
அப்படி நள்ளிரவில் தொடர்ந்த யாகம் பகலிலும் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சுதர்சன யாகம் மற்றும் பிரத்தியங்கரா யாகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. எதிரிகளை வெல்வதற்காகவும், ஆட்சி அதிகாரம் நிலைத்திருப்பதற்காகவும் இந்த யாகம் நடத்தப்பட்டது, என்று கூறப்படுகிறது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் நள்ளிரவு யாகம் நடைபெற்ற போது, கோயிலின் நிர்வாக அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விஷயம் வெளியே தெரிந்து, சிவனடியார்கள் அறக்கட்டளையின் மாநிலச் செயலாளர் மேலகரம் ஈஸ்வரன் தலைமையில் பக்தர்கள் திரண்டு நம்பூதரியிடம், யாகம் ஏன் நடத்தப் பட்டது? என கேட்டனர்.
அதற்கு அவர், இங்கு நடைபெற்ற துர் மரணங்களின் நிவர்த்திக்காகவும், உலக நன்மைக்காகவும், யாகம் நடைபெற்றதாகக் கூறினார்.
அதற்கு அவர்கள், “உலக நன்மைக்கு யாகம் நடத்தினீர்கள் என்றால், அதை பகலில், பக்தர்கள் முன்னிலையில் நடத்தி இருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நம்பூதரியால் பதில் அளிக்க இயலவில்லை.
அதைக் கேட்ட அறக்கட்டளையினர், “இந்த மாதிரி நள்ளிரவில், ஆவிகளை வரவழைத்து, கோவிலுக்குள் யாகம் நடத்தினால், இங்குள்ள தெய்வத்தின் சக்தி குறைந்து விடும். இது ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே, இந்த யாகத்தை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி வருகின்றனர்.






