ஆம்பூர் அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 7 பேர், குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் நடக்கும் சிறப்பு தொழுகையில் (இஸ்திமா) கலந்து கொள்ள காரில் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தொழுகை முடிந்து, காரில் பேர்ணாம்பட்டு திரும்பி வந்து கொண்டிருந்த அவர்கள், ஆம்பூர் பேர்ணாம்பட்டு சாலையில் உள்ள அயித்தம்பட்டு கூட்டு ரோடு அருகே வந்தபோது, ஒட்டுனரின் கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் ஓரம் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் முகமது சபான், முகமது இம்ரான் மற்றும் உசேன் ஆகியோர் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களுடன் பயணித்த மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த 3 பேரின் உடலையும் கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து, படுகாயமடைந்த 4 பேரை சிகிச்சைக்காக 108ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் முஜம்மில் மற்றும் நுபேல் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுகம்பரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், முஜம்மில் அடுகம்பரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடா்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த உமராபாத் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கல்லுரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள்டையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






