காதலிக்காக ஆணாக மாறிய யுவதி; ஏமாற்றிய காதலி வேறு திருணம்!

தனது நண்பிக்காக ஆணாக மாறிய யுவதியொருவர் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். தனது நண்பியுடன் சேர்ந்து வாழ ஆணாக மாறியபோதும், தனது நண்பியான யுவதி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டார் என்றே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தை அறிந்த நண்பியின் கணவன் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இரண்டு வழக்குகளும் யாழில் வேறுவேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமூகப் பொறுப்புணர்வு கருதி, சம்பவத்தில் தொடர்புடையவர்களின் அடையாளங்களையும், பிரதேசங்களையும் வெளியிடுவதை தமிழ்பக்கம் தவிர்த்துள்ளது.

வலிகாமம் வடக்கு பகுதியை சேர்ந்த இரண்டு யுவதிகள் நீண்டகாலமாக நெருக்கமாக வாழ்ந்துள்ளனர். பின்னர் இருவரும் ஒருபாலின உறவாளர்களாக மாறினர். தாங்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டுமென முடிவெடுத்துள்ளனர். ஒருவர் ஆணாக மாற வேண்டுமென்ற நிலையில், யுவதியொருவர் தன்னை ஆணாக மாற்றிக் கொண்டார்.

சத்திரசிகிச்சை மூலம் மார்பகங்களை அகற்றி ஆணாக மாறினார். யாழ் போதனா வைத்தியசாலையில் உளவியல் நிபுணரின் கீழ் சிகிச்சை பெற்று, அவர் ஆண் என்ற பரிந்துரையை பெற்று, பதிவாளர் திணைக்களத்தின் மூலம் தனது அடையாள அட்டையையும் மாற்றிக் கொண்டார்.

எனினும், இவர்களின் ஒருபால் உறவை இரண்டு வீட்டிலும் கவனத்தில் எடுக்கவில்லை. சிறிது காலம் இருவரும் நெருக்கமாக இருந்த பின்னர், காதலியான யுவதி தொடர்பை துண்டித்து, பெற்றோர் நிச்சயித்த மணமகனை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், ஆணாக மாறியவர் ஏமாற்றமடைந்து, நண்பியின் கணவனை சந்தித்து விடயத்தை கூறியுள்ளார். இதையடுத்து, கணவனால் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றமொன்றில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நடந்து வருகிறது.

ஆணாக மாறியவர், யாழ்ப்பாணத்திலுள்ள இன்னொரு நீதிமன்றத்தில் மிக அண்மையில் நம்பிக்கை மோசடி வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, நீதிமன்ற ஆலோசனைக்கமைவாக, அவர் உளவியல் நிபுணரின் ஆலோசனையையும் பெற்று வருகிறார்.