திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் அப்பளப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கீர்த்தனா . இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கீர்த்தனா கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவவலி ஏற்பட்டு நிலக்கோட்டை வத்தலக்குண்டு சாலையில் உள்ள அழகுராஜாமுத்து கிளினிக்கில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்து கீர்த்தனாவுக்கு ஓரிரு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் கீர்த்தனா மற்றும் கணவர், உறவினர்களும் தனிவார்டு எடுத்து தங்கியிருந்தனர்.
14ஆம் தேதி இரவே கீர்த்தனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படவே பதறயடித்த செவிலியர்கள் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் மருத்துவர்களை உடனே சந்திக்குமாறு கூறியுள்ளனர்.
உறவினர்களை பார்த்து பேசிய மருத்துவர் ரத்தப்போக்கு நிற்க வேண்டுமென்றால் உடனடியாக கர்ப்பபை ஆப்பரேசன் செய் தால் தான் பெண்ணை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.
கணவர்மற்றும் உறவினர்களும் சம்மதித்து ஆப்பரேசன் செய்ய அனுமதி அளித்துள்ளனர். இதன்பின்னர் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரத்தப்போக்கு நிற்காததால் கீர்த்தனா உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து இறந்த பெண்ணின்கணவர் ராஜேந்திரன் கூறும்போது,என் மனைவியை இந்த மருத்துவமனையில் சேர்த்து குழந்தை பெற்றுசுகமாக வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றுதான் வந்து சேர்த்தோம். ஆனால் என் மனைவியை கொன்றுவிட்டார்கள்.
எங்களுக்கு பாதுகாப்புகொடுக்க வேண்டிய காவல்துறையினர் உடனடியாக பிணத்தை தூக்கிகொண்டு செல்லுங்கள் என்றுமிரட்டும் தொனியில் பேசுகிறார்கள்.
என் மனைவியின் சாவுக்கு நீதி கிடைக்க வேணடும் என்று கண்ணீர் மல்க கூறினார். மருத்துவமனையில் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையை காவல் துறையினர் மூடிவிட்டார்கள்.
இந்நிலையில் வியாழனன்று மருத்துவமனை செயல்படுகிறது என்பதை அறிந்த இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதனம் செய்து அனுப்பியவுடன் மருத்துவரின் வீட்டையும் முற்றுகையிட்டதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளோமே.
பின்னர் ஏன் இப்படி எங்களை அலையவிடுகிறீர்கள் என்று கடிந்து கொண்டார்கள். இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சௌந்தர்ராஜன் கூறுகையில், இந்த மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புபுதுப்பட்டியை சேர்ந்த மனோஜ் குமார் என்ற சிறுவன் மருத்துவரின் தவறான சிகிச்சையால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஊசி போட்டதால் உயிரிழந்தான்.
இம்மருத்துவமனையில் முறையான மருத்துவர்கள் இல்லை. செவிலியர்களே அனைத்து வேலையும் செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்தபெண்ணின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இம்மருத்துவமனை மருத்துவரை கைது செய்ய வேண்டும். மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.






