ஏழைகளில் சொர்க பூமி கல்வராயன் மலை…

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே அமைந்துள்ளது கல்வராயன் மலை. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மலையில், கண்களுக்கு குளிர்ச்சியாக இயற்க்கை வளங்களும், மரங்களும், ஆர்ப்பரிக்கும் அருவிகளும், பறந்து திரியும் பறவைகளும், வன விலங்குகளும் காணப்படும் அழகிய இடமாகவும், ஏழைகளின் சொர்கமாகவும் உள்ளது.

இந்த கல்வராயன் மலை சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வரையும், மேற்குப்பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வரையும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது. மேலும் கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. இந்த கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு. வடபகுதி சின்னக் கல்வராயன் என்றும் தென்பகுதி பெரிய கல்வராயன் என்றும் குறிப்பிடுகின்றனர். கல்வராயன்மலையைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகள் வடமேற்கு பருவகாற்றின் மூலமாக மழையைப்பெறுகிறது.

மேலும் கல்வராயன் மலையில் மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காண்பவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்த நீர்வீழ்ச்சியில் குளியலறை வசதிகளும் பெண்களுக்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் படகில் உல்லாச பயணம் சென்று வர படகு குழம் உருவாகியுள்ளது. மேலும் கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.

இந்த மலையில் உற்பத்தியாகும் கோமுகி ஆறு காவிரிக்கு இணையாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. கல்வராயன் மலையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக கோடைக்கால விழாவை நடத்துகிறது. இந்த கோடை விழா ஜூன் மாதங்களில் நடைபெறுகிறது. மலை ஏறுபவர்களுக்காக ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கல்வராயன் மலைகளுக்கு சென்று கோடை திருவிழா காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

மேலும் இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமகி அணை. 1963 ம் ஆண்டு கட்ட தொடங்கிய இந்த அணை 1965 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பொடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. இந்த ணையை சுற்றிலும் வயல்வெளிகள் பசுமையாக காட்டியளிக்கின்றன. மேலும் இந்த ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை மீதமர்ந்து நேரு சவாரி செய்யும் சிலை, குறள் எழுதும் திருவள்ளுவர் சிலை, சிவபெருமான் சிலை, காளை மாடு, உழைப்பாளி சிலைகள், கண்கவர் விளக்குகள், காட்சி மேடைகள் இருக்கின்றது. அருகில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது.

கல்வராயன் மலைக்கு சுற்றுலா செல்பவர்கள் கோமுகி அணையையும் ரசித்துவிட்டு செல்லலாம். கல்வராயன்மலையில் உள்ள பெரியார் அருவி, மேகம் அருவி, வெள்ளி அருவிகளை காண்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் கோமுகி அணைக்கும் வந்து செல்கின்றனர்.