கேஜிஎஃப் பட நாயகர் யாஷ் வீட்டின் முன் அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பாகியுள்ளது.
தன் ஹீரோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என்ற விரக்தியில் மனமுடைந்து இத்தகைய அதிர்ச்சி முடிவை அவர் ரசிகர் தேடிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்த ரசிகரின் பெயர் ரவி ரகுராம், வயது 26 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாஷ் வீடு அமைந்துள்ள ஹோஸ்கெரெஹள்ளிக்கு இவர் வந்து யாஷ் வீட்டு வாசலில் காத்துக் கிடந்துள்ளார், ஆனால் அம்ப்ரீஷ் காலமானதால் தன் பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை, அப்போது அவர் ஊரிலும் இல்லை. இதனையடுத்து மனமுடைந்த ரவி ரகுராம் தன் மீது தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
யாஷ் வீட்டு காவலாளிகள் தீயை அணைக்க முயன்று அவரை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். விஷயத்தை கேள்விப்பட்ட யாஷ் மருத்துவமனைக்குச் சென்று ரவியைச் சந்தித்தார், அவர் உயிர் பிழைக்க பிரார்த்தித்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து பேசிய யாஷ், எனக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் தேவையில்லை. இது அன்பு அல்ல, இது எனக்கு ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படுத்தாது.
இனிமேல் இப்படிப்பட்டவரை நான் பார்க்க வரமாட்டேன், ஏனெனில் இது தவறான ஒரு செய்தியை கொடுப்பதாக அமையும், ஏனெனில் நான் வந்து அவர்களைச் சந்திப்பேன் என்று அவர்கள் தவறாக நினைப்பதற்கு வழிவகுக்கும்.
அதாவது இப்படிப்பட்ட தீவிர முடிவை எடுக்கும் ரசிகர்களை நான் ஒருபோதும் இனி பார்க்கமாட்டேன் என்று உறுதியுடனும் வேதனையுடனும் தெரிவித்துள்ளார்.