தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மலிங்கா: இறுதி வாய்ப்பு…

நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்கும் டி20 போட்டியில், இலங்கை கேப்டன் மலிங்கா தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி இன்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி களமிறங்குகிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்த இலங்கை அணி, ஒரே ஒரு போட்டியான இந்த டி20யில் வெற்றி பெறும் முனைப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சிறிய ஆடுகளம் என்பதால் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகவும், பந்துவீச்சாளர்களுக்கு சவாலானதாகவும் இந்த போட்டி இருக்கும். எனவே, வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தன் திறமை நிரூபிக்கும் கடைசி வாய்ப்பு இதுவாக பார்க்கப்படுகிறது.

மேலும் சொதப்பலான ஆட்டத்தினால் டி20 தரவரிசையில் பின்தங்கி இருக்கும் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் வலுவான அணியாக உள்ளது.

அத்துடன் சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது சவாலானதாகும். ஆனால், இலங்கை அணி கேப்டன் மலிங்கா தனது பந்துவீச்சின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.

இந்தப் போட்டி குறித்து அவர் கூறுகையில், ‘ஆம், இங்கு பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியது தான். ஆனால் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அந்த அனுபவம் உள்ளது.

நீங்கள் உங்கள் திறமையை குறைந்தபட்சம் 90 சதவிதம் முழுமையாக செயல்படுத்த வேண்டும். யார்க்கர் இப்போதும் யார்க்கர் தான்’ என தெரிவித்துள்ளார்.