எல்லைச்சுவர் அமைக்க காங்கிரசிடம் நிதி கேட்கிறார் ட்ரம்ப்!

‘அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைச் சுவர் அமைக்க, காங்கிரசிடம் 40 ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளேன்’ என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டுக்குள் நுழைய முயன்று வருகின்றனர். அவர்களை தடுப்பதும், நாட்டுக்குள் வந்தவர்களை மீண்டும் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்புவதும் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அத்துடன், சட்டவிரோதமாக குடியேறியவர்களால் அமெரிக்கர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைச் சுவர் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உடனடியாக தலையிட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 40 ஆயிரம் கோடி) நிதி வழங்க வேண்டும். இல்லையெனில், மேலும் ஆயிரக்கணக்கானோரை அமெரிக்கா இழக்க நேரிடும். எனவே, தேவையான நிதியை உடனே வழங்கும் படி அமெரிக்க மேலவை (செனட்) மற்றும் கீழவை (ஹவுஸ்) அமைப்புகளில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.