பிரபல தமிழ்ப்பட நடிகர் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த ரசிகர்!

நடிகர் யஷின் தீவிர ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யஷ் நடிப்பில் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப். படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.

திரையுலகமே வியக்கும் வகையில் வெற்றிப் படம் கொடுத்த யஷ் நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்க வேண்டும்.

ஆனால் நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானார். அவரை யஷ் தன் வீட்டின் மூத்த உறுப்பினராக நினைத்து வந்தார். அத்தகையவர் இறந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. இதை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

யஷ் தனது பிறந்தாளை கொண்டாடவில்லை என்பதை அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து ரவி என்கிற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றும் வரும் ரவியை மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்தார் யஷ்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.